பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.


பீகார் மாநில தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் விமர்சகர் மதூர் சத்யா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், என்.டி.ஏ கூட்டணியில் நிதிஷ்குமார், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதாக சொல்கிறார்கள். இந்தியா கூட்டணியில் இழுபறி இல்லை. அது ஒரு நட்பு ரீதியான போட்டியாக அமைந்துவிட்டது. இதுவரை பாஜக வைத்த விமர்சனம், என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பதுதான். ஆனால் தற்போது முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார்.
நிதிஷின் ஜேடியு கடந்த முறை 40 இடங்களில் தான் வென்றது. அக்கட்சி இம்முறை 15- 20 இடங்கள் வரைதான் வெல்லும் என்று கணிக்கிறார்கள். பீகாரில் மிகப்பெரிய தலைவரான நிதிஷை, பாஜக மட்டம் தட்டுவது அம்மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ்குமார், பெண்கள் வாக்குகள் அதிகம் உள்ளது. அதற்கு காரணம் நிதிஷ் பெண்களுக்கு கல்வி வழங்கியவர் ஆவார். அதேபோல், பெண்களின் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கு கொண்டுவந்தார். ஆனால் தற்போது ஜேடியு கட்சியினரே மதுவை விற்பனை செய்வதால், பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், பெண் வாக்காளர்களை கவரும் வகையில் தேஜஸ்வி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, 24 பெண் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளார். பெண்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற ஜீவிகா என்கிற திட்டத்தை அறிவித்துள்ளார். உ.பி.யில் சமாஜ்வாதி, பிகாரில் ஆர்.ஜே.டிக்கு மை கூட்டணி என்கிற முஸ்லீம், யாதவ் கூட்டணி என்பது முக்கியமானதாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகிலேஷ் அதனை உடைத்து, அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக கொண்டுசென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதேபோல், தற்போது தேஜஸ்வி பிடிஏ எனப்படும் அனைத்து தரப்பினருக்குமான கூட்டணியாக மாற்றி அமைத்துள்ளார்.
கடந்த முறை 75 இடங்களில் ஆர்.ஜே.டி வென்ற சூழலில் அவர்களில் 36 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வில்லை. அதே நேரத்தில் பாஜகவில் வேட்பாளர்கள் இல்லாததால், எம்.பியாக இருப்பவர்களை ராஜினாமா செய்ய வைத்து போட்டியிட வைக்கின்றனர். ஆர்.ஜே.டி ஒரு யாதவர்களின் கட்சி என்கிற பிம்பத்தை உடைப்பதற்காக, யாதவர்களுக்கான இடங்களை 30 சதவீதம் வரை தேஜஸ்வி குறைத்துள்ளார். உயர்சாதி இஸ்லாமியர்களுக்கான இடங்களையும் அதிரடியாக குறைத்துள்ளனர். மேலும், பாஜகவுக்கு ஆதரவாக உள்ள இபிசி பிரிவினரின் வாக்குகளை பெறும் முயற்சிகளிலும் தேஜஸ்வி இறங்கியுள்ளார்.

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிரசாந்த் கிஷோருக்கு 23 சதவீதம் வழங்கியுள்ளனர். ஆனால் அவர் கட்சியின் வேட்பாளர்கள் பாஜகவில் போய் சேர்கிறார்கள். பீகார் தேர்தல் விவகாரத்தில் எல்லோரும் பயப்பட வேண்டிய விஷயம் பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் தேர்தல் ஆணையம்தான். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம், காங்கிரஸ் – ஆர்ஜேடிக்கு ஆதரவான 47 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அதேநேரத்தில் யோகேந்திர யாதவ், பீகாரின் வாக்காளர் எண்ணிக்கையை 8.19 கோடியாக இருக்க வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையம் தொடங்கியதே 7.89 கோடி வாக்காளர்களில் இருந்துதான் தொடங்கினார்கள்.
ஏற்கனவே அவர்கள் 30 லட்சம் பேரை நீக்கிவிட்டனர். எனவே கிட்டத்தட்ட 6- 7 சதவீதம் வாக்காளர்களை அவர்கள் ஏற்கனவே நீக்கிவிட்டனர். ஆனால் அதை தாண்டியும் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பாஜக வழங்கியுள்ள ரூ.10,000 பெரிய தொகையாகும். ஆனால் ஒரே ஒரு முறை வழங்கப்பட்டதாகும். இதன் மூலம் பாஜக இழந்த பெண் வாக்காளர்களில், சில பகுதியினர் மீண்டும் வாக்களிக்கலாம்.

இவற்றை எல்லாம் தாண்டி இந்தியா கூட்டணியின் பிரச்சாரம் சிறப்பாக உள்ளது. தேஜஸ்வி யாதவ் இளைஞர்களின் அடையாளமாக இருக்கிறார். வருடத்திற்கு 2 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். ராகுல்காந்தி அவருடன் இணையும்போது தேஜஸ்வியின் இமேஜுக்கு பலமூட்டுவதாக இருக்கிறது. இதை தாண்டி தேர்தல் நடவடிக்கைகளில், தங்களுடை தரப்பினர் அனைவரும் வாக்களிக்கிறார்களா? என்பதை அதி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆனால் அதில் பிரச்சினை என்ன என்றால் அங்கே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பூத் கமிட்டி கிடையாது. அந்த குறையை சரிசெய்தால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே 36 எம்எல்ஏக்களை தூக்கியுள்ளனர். புதிதாக 24 பெண்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். எனவே அதிருப்தியாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். அதுதான் தோல்விக்கு காரணமாக இருக்குமே தவிர, பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்பது நிச்சயமாக இருக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


